லடாக்கின் லே பகுதியில் போராட்டத்தில் வன்முறை வெடித்த நிலையில் பி.என்.எஸ்.எஸ் 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
லடாக்கின் லே பகுதியில் இன்று 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாநில அந்தஸ்து கோரியும், அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையின் கீழ் லடாக்கை சேர்க்கக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வன்முறை வெடித்தது.
போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசி, தடியடிகள் நடத்தினர். தொடர்ந்து, காவல் துறையினர் வாகனத்திற்கும், லேவில் உள்ள பாஜக அலுவலகத்திற்கும் தீவைக்கப்பட்டது. இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், அனுமதியின்றி போராட்டம் நடத்தவோ, 5 பேருக்கு மேல் ஒன்று கூடவோ கூடாது என பி.என்.எஸ்.எஸ் 163 பிரிவின் கீழ் தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட நீதிபதி ரோமில் சிங் டோங்க் உத்தரவிட்டுள்ளார்.
லே பகுதியில் நடந்த வன்முறையில் 4 பேர் உயிரிழந்தனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.